கல்கியின் இன்றியமையாத பெருமைகளின் காரணங்களுள் ஒன்று. கல்கியின் வார்த்தைகளை மேன்படுத்திக் காட்டுவதற்குத் தான் இப்படி ஒரு சரித்திரம் முன் நடந்ததோ ? இல்லை, ஈடு இணை அற்ற இந்த வீரமும் விவேகமும் கலந்த நிகழ்வுகளை மேலும் வலுபடுத்த அத்தகைய வார்த்தைகளை உபயோகித்தாரோ? ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு அழகு சேர்க்கிறது?
பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னம் இத்தனை வாழ்க்கைத் தந்திரமும் வீரமும் வைராக்கியமும் நம் தமிழர்கள் இடையே இருந்ததன் எடுத்துக்காட்டை விளக்குகிறது இந்த பார்த்திபன் கனவு..
உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் பேணி பாதுகாத்தார்கள் சோழர்கள். சோழர்களின் தலை சிறந்த பெருமைகளுள் இதுவும் ஒன்றே.
வீர பார்த்திப மகாராஜா, நரசிம்மவர்ம பல்லவன் இவர்களைப் பற்றி இன்று நான் தெரிந்துக்கொண்ட வியப்படையதக்க குணங்களும் செயல்களும் ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியவை. பல்லவர்களின் யுக்திகள் தான் எப்பேர்ப்பட்டவை?! எதிரியே ஆயினும், அவன் வீர மரணத்தைக் கண்டு வணங்குவதும் , சாட்சி அல்லாத வாக்கே ஆயினும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொள்வதும் என உயர்ந்த குணங்கள் கொண்ட பல்லவன் மாமல்லனின் புகைப்படதையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது.
நம் நாட்டில் அந்நாளிலே சிற்பங்களுக்கும் சித்திரங்களுக்கும் கலைகட்கும் அரசர்களும் மாஹா பிரபுக்களும் கொடுத்த முக்கியத்துவத்தை அறிந்தால், இன்று நம்மவர், சிற்பங்களை உடைப்பதும் , துஷ்டம் செய்வதும் , மாசு படுத்துவதும் போன்ற இன்னல்களை செய்ய மாட்டார்கள் !! மாமல்லபுரம் தோற்றத்தின் முன்னம் அந்த சிற்பங்களைத் தோற்றுவிக்க மகேந்திரவர்மன் இட்ட யோசனையை அறியும் போதே நம் எண்ணம் அந்த பாறைகளை மனத்திரையில் நிறுத்துகிறது.
அதிகாலை விடியலையும் காவிரி ஆற்றின் தேகத்தையும் இவ்வளவு அழகாகவும் கூர்மையாகவும் வர்ணிக்க முடியுமா என்ன? அத்தனை கலை நயம் வார்த்தைகளில். காவிரியின் அழகையும் கம்பீரத்தையும் நேரில் நிறுத்தியதாய் தோன்றியது ஒவ்வொருமுறையும்.
விசுவாசம் என்னும் வார்த்தையின் அர்த்தம் இவ்வுலகில் குன்றிவருகிறது என்பதே எனது கருத்து. இக்காலத்து மானிடர்கள் எல்லோரும் , நம் முன்னவர்களான மன்னர் ஆட்சியில் வாழ்ந்த குடிமக்களின் விசுவாசத்தைப் பற்றி சிறிதாவது படித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் !! விசுவாசத்தின் கதாப்பாத்திரங்கள் பொன்னன், வள்ளி அந்நாளில் வாழ்ந்திருந்தனர்.
'பார்த்த நொடியில் பிறக்கும் காதல்' என்பதில் சற்றும் நம்பகம் இல்லாதவள் நான். அனால், அன்று வாழ்ந்த விக்கிரம சோழன் , குந்தவி தேவி இன் காதல் பாகங்களைப் படிக்கையிலே , 'ஒருவேளை அப்படியும் பார்த்தவுடன் காதல் பிறக்குமோ' என்ற சலன எண்ணம் தோன்றலாயிற்று எனக்கு. ஓரிரு இடங்களில் சிவகாமி அம்மையின் நடனத்தையும், மாமல்லன் மீது அவளுற்ற காதலையும் பற்றி கூறியமையால், 'சிவகாமி சபதம்' புத்தகத்தை உடனே படித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் வளர்கிறது !!
'ஆரப்போட்டால் ஆறிவிடும்' என்பதற்கு எடுத்துக்காட்டு, வடித்த சோறு அன்றி, நம் தமிழர்களின் பெருமைகளோ , இத்தகைய இணையற்ற படைப்புகளோ அல்ல. பார்த்திபனின் கனவைப்போல் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஓர் லட்சியத்தை வளர்த்துக் கனவு காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!!
http://ebookforu.blogspot.com/2010/12/parthiban-kanavu-kalki.html
-மாயா







